அமெரிக்காவில் 2 அணைகளில் உடைப்பு- 500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்

338 0

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் கனமழையால் இரண்டு அணைகளில் உடைப்பு ஏற்பட்டதால், 500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மிக்சிகன் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்து உள்ளது. கனமழையால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்நிலையில் மிட்லேண்ட் கவுண்டியில் உள்ள ஈடன்வில் அணை மற்றும் சான்ஃபோர்ட் அணையில் உடைப்பு ஏற்பட்டது. அணைகளில் இருந்து தண்ணீர் ஆக்ரோஷமாக வெளியேறத் தொடங்கியதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.

மிட்லேண்ட் கவுண்டியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. சுமார் 42 ஆயிரம் மக்கள் வசிக்கும் மிட்லேண்டு நகரின் அனைத்து பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் மூழ்கி உள்ளன. உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

100 ஆண்டுகளில் இல்லாத தொற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும்  நிலையில், இப்போது 500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளத்தை மிச்சிகன் மாநிலம் எதிர்கொண்டிருப்பதாக மிச்சிகன் கவர்னர் கூறியுள்ளார். மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.