சட்டத்தரணி ஹிஜாஸ் தடுத்து வைப்பு : 185 சட்டத்தரணிகளின் கையொப்பத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு கடிதம்

349 0

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டு நான்கு வாரங்களுக்கு மேற்பட்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், இதுவரையில் முறையான சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவித்து சட்டத்தரணிகள் சங்கத்துக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 185 சட்டத்தரணிகளின் கையொப்பத்துடன் இந்த கடிதம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தனிநபர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சட்டத்தரணிகளின் தொழில் சார் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யினர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சட்டத்தரணிகள் உதவியைப் பெற அவர்கள் இடமளிக்காமை போன்ற இரண்டு பிரதான அம்சங்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் அவதானத்துக்குக் கொண்டுவருவதையே மேற்படி கடிதத்தின் மூலம் தாம் எதிர்பார்ப்பதாக கையொப்பமிட்ட 185 சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி இரண்டு விடயங்களையும் பொலிஸார் மேற்கொள்ளாமை பயங்கரமான நிலைமையாகும். சட்டத்தைப் பின்பற்றுவதற்கு சி.ஐ.டி.யினர் தவறியுள்ளனர். நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு உயர்நீதிமன்றத்தின் வீரவன்ச எதிர் சட்டமா அதிபர் வழக்கு எடுத்துக் காட்டாகும்.

அந்த வகையில், நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்ற உரிமை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விடயத்தில் மீறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள ஒரு விடயம் மீறப்பட்டுள்ளபோது, அதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் குரல் கொடுப்பது அவசியமாகும்.

அதேபோன்று, சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. இது பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து தனிநபர்களையும் பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கையின் 15 (2) பிரிவை மீறும் செயலாகும்.

மேற்படி இரண்டு விடயங்களும் உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ள, சர்வதேச உடன்படிக்கைகளில் கூறப்பட்டுள்ளவையாகும். இவை இரண்டும் மீறப்பட முடியாதவையாகும்.

>எனவே, சட்டத்துக்குட்பட்ட மேற்படி விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் முன்னிலையாகுவது முக்கியமாகும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.