ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மனுக்கள் மீதான 4 ஆம் நாள் பரிசீலனை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.
மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் கலாநிதி. P. டீ. ஜயசுந்தரவின் சார்பில் மன்றில் முன்னிலையான, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நேற்று தமது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
அரசியலமைப்பின் 62(2) ஆம் உறுப்புரை பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டு வழிகளில் கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருடம் பூர்த்தியாவதன் ஊடாக மற்றும் நாடாளுமன்றம் நாலரை வருடங்களை பூர்த்தி செய்ததன் பின்னர் ஜனாதிபதியால் அதனை கலைக்க முடியும்.
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் கீழேயே அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 70 (5) அ உறுப்புரைக்கு அமைய, நாடாளுமன்ற கலைக்கப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி, நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என மனுதாரர் தரப்பால் வாதிடப்படுகின்றது.
இது அடிப்படையற்றது.
நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள விதி விதானங்கள் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்துடன் சேர்த்து பார்க்கப்பட வேண்டியவை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரம் எவ்வாறு ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது என்ற விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த காலத்தில் பொதுச்சேவைக்காக பயணத்தை ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இந்த நிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு சமர்பனங்களை முன்வைக்கவுள்ளதாக எமது நீதிமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.