சிறிலங்கா அரசாங்கம் சிங்கள வாக்குகளை தன்னகப்படுத்தும் நோக்கிலேயே வடக்கின் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டமை தொடர்பில் நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட அவர், அது தொடர்பில் இன்று மன்னாரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் குறித்த மாவீரர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இவ்விசாரணைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியம் என்னவெனவும் கேள்வி எழுப்பிய அவர், சிங்கள மக்களை திருப்திப் படுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்று சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஆட்சிக்கும் வரும் செயற்ப்பாட்டினை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 திகதி மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பண்டிவிருச்சான் ஆகிய இரு மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் தினம் அனுஸ்ரிக்க ஏற்பாடு செய்தமை தொடர்பாக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மன்னாரை சார்ந்த இருவர் தனித்தனியாக இரண்டு மணி நேரம் விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டனர்.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மற்றும் மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவின் முக்கியஸ்தரான ஞா.பிறேம் குமார் ஆகிய இருவருமே இவ்வாறு கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் சுமார் இரண்ட மணி நேரம் தனித்தனியாக விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டிருந்தனர்.