சிறிலங்காவில் நான்காவது நாளாகவும் மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

280 0

சிறிலங்காவில்  பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நான்காவது நாளாகவும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர்நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட 07 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.