அண்ணாமலை பல்கலைக்கழகப் பிரச்சினையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கை:
“புகழ் வாய்ந்த பாரம்பரியம் கொண்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் நடந்த நிர்வாகச் சீர்கேடுகளால் நெருக்கடி ஏற்பட்டு, அப்பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு எடுத்துக்கொண்டது.
பல்கலைக்கழக நெருக்கடிகள் குறித்து பணியாளர்கள் சங்கங்களுடன் நிர்வாக அதிகாரி சிவதாஸ் மீனா நடத்திய பேச்சுவார்த்தையில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுப் பணியாளர்கள் 3,600 பணியாளர்கள் அரசின் பல்வேறு துறைகளில் அயல் பணியிடத்தில் 3 ஆண்டு காலம் பணி நிரவல் முறையில் பணியாற்றுவது, பின்னர் பழையபடி பணி உயர்வு உள்ளிட்ட உரிமைகளுடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியமர்த்துவது என்று ஒப்பந்தம் காணப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தக் காலம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. இதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2,040 ‘சி’ மற்றும் ‘டி’ பணியாளர்களுக்கு உடனடியாக பணி அமர்வு வழங்க வேண்டும். ஆனால், இதனை செய்ய மறுத்து வரும் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்பந்த காலத்தை மேலும் நீட்டித்து பணியாளர்களை வஞ்சிக்கும் போக்கில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் நியாயமற்ற பணியாளர் நடைமுறைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சிதம்பரம் அண்ணாமலை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருந்து வரும் பணியாளர்கள் தொலை தூரப் பணியிடங்களில் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்துப் பல்கலைக்கழகம் துளியும் அக்கறை காட்டவில்லை. இது பணியாளர்கள் நலச் சட்டங்களை அத்துமீறிய செயலாகும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் தமிழ்நாடு முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, பணி நிரவலில் அயல் பணிகளுக்குச் சென்ற அண்ணாமலை பல்கலைக்கழக ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களை மீண்டும் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.