ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் பலி

359 0

ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் தலிபான் பயங்கரவாதிகள் தாமாக முன்வந்து சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி அமைதியை கடைப்பிடித்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசு கோரிக்கை வைத்தபோதிலும் ரமலான் மாதத்தில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர்.

மாறாக அவர்கள் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடைய ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும் காலூன்றி தாக்கல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு தினந்தோறும் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் பர்வான் மாகாணம் சாரிகார் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் ரமலான் மாத சிறப்பு தொழுகை நடைபெற்றது. உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் மசூதிக்கு வந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் சிலர் மசூதிக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி மசூதியை விட்டு வெளியே ஓடினர். ஆனால் பயங்கரவாதிகள் சற்றும் ஈவு, இரக்கமின்றி கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத்தள்ளினர்.

இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த நபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தொழுகையை முடித்து விட்டு மசூதியில் இருந்து வெளியே வந்த நபர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த 2 தாக்குதலுக்கும் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதல்களை நாங்கள் நடத்தவில்லை என தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே தகார் மாகாணம் குவாஜா பகாவுதீன் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.