ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் 200 ரெயில்களில் தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை

267 0

ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள 200 ரெயில்கள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு ஒரு ரெயிலும் இல்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், ரெயில், பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரெயில்களை நாடு முழுவதும் ரெயில்வே இயக்கி வருகிறது.
இந்த நிலையில்,  ஜூன் 1ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தார்.
அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரெயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 200 ரெயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அதில் தமிழகத்திற்கான எந்த ரெயில் சேவையும் இடம்பெறவில்லை. 200 ரெயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்க உள்ளது.
இந்த ரெயில்களில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும். ஆர்.ஏ.சி, காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். எனினும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரெயில்களில் பயணம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.