பஸ் சேவை வடக்கில் இன்று ஆரம்பம்! சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும்

356 0

வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வட இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது:

“கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாகப் போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பஸ் சேவையை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளோம்.

வடக்கு மாகாணப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையைப் பின்பற்றி ஆசன இருக்கைகளுக்கு அமைவாக தனியார் பஸ் சேவைகள் யாவும் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும்.

குறிப்பாக பஸ்ஸில் பயணம் செய்யும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அதாவது கைகளுக்குக் கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், நடத்துநர்கள் என சுமார் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாகப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனினும் பொதுமக்களின் நலன் கருதியே இன்றைய தினத்தில் இருந்து இந்த சேவையை ஆரம்பிக்க உள்ளோம்” என்றார்.