ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2020 திங்கள் அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனை, சுவிசின் பல பாகங்களிலும் உள்ள பொது இடங்கள், வழிபாட்டுத்தளங்கள் மற்றும் மக்கள் தாம் வாழும் இல்லங்களிலுமாக கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து கடைப்பிடிக்கப்பட்டது.
கொரோனாத் தொற்றானது உலகப்பேரிடராக மாறிநிற்கும் இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்களிலும் நடாத்தப்பட்ட வணக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் சுவிஸ் கூட்டாட்சி அரசினால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி தமிழின அழிப்பு நினைவில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். அத்தோடு சில மாநிலங்களில் கொரோனா நுண்ணுயிர்த் தொற்றினால் சாவடைந்த மக்களுக்குமாகவும் வணக்கம் செலுத்தப்பட்டது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனையில் நடாத்தப்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இறுதிநாட்களில் எமது உறவுகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது பசியாற ஒருநேர உணவுக்கு வழியின்றி உப்பு, பால் இல்லாத கஞ்சி உண்டு பசியாறியதை நினைவுகூரும் முகமாக நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன்; நாம் அனைவரும் ஒற்றுமையாக தாயகம் நோக்கிய விடுதலைப் பணியில் தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன், நம்புங்கள் தமிழீழம் பாடலோடு தமிழர்களின் தாரக மந்திரம் ஒலிக்க ஷவலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்!| என்ற உணர்வுடன்; நிறைவுபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.