சிறிலங்காவில் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது.
இதன் போது, ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது தற்போதைய சூழ்நிலையில் நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு சார்பாக நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.
சுகாதார அமைச்சினால் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்தக் கூடிய சாதகமான சூழல் குறித்து அறிவிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது என்று அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.
குறித்த அறிவிப்பின் பின் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தனது கட்சிக்காரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் குறித்த மனு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படாது என நீதிமன்றில் அறிவித்துள்ளார்.