யாழ். குடாநாட்டில் தற்போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் எஸ்.மோகனகுமார் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்…
உங்கள் வீடுகளில் உட்பகுதி மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை பரிசோதனை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் பரிசோதனையின் போது உங்கள் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் அடையாளப்படுத்தப்படுமேயானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் டெங்கு தாக்கத்தினால் எமது மக்கள் பட்ட இன்னல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. எனவே மக்கள் கொரோனா மற்றும் டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்படும் நடைமுறையினை பின்பற்றி செயற்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.