தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சிறப்பு ‘கவுண்ட்டர்’ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்களை செல்லாததாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அன்னியச் செலாவணியை மாற்றிக்கொள்ள ஏதுவாக, தமிழ்நாட்டில் வங்கி கிளைகளில் சிறப்பு ‘கவுண்ட்டர்’களை அமைத்து தர வேண்டும் என சுற்றுலாத்துறை ஆணையர் ஹர் சகாய் மீனா, இந்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் சிறப்பு பண பரிவர்த்தனை பிரிவு (கவுண்ட்டர்) வசதியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் செனோடாப் சாலை கிளையில் சிறப்பு கவுண்ட்டர் வசதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் மிஷன் தெரு, இந்திரா காந்தி சதுக்கம், லாஸ்பெட் மற்றும் ஆரோவில் உள்ள வங்கி கிளைகளில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. கோயம்புத்தூரில் திருச்சி சாலை கிளை, மதுரையில் கே.கே. நகர் கிளை, திருச்சியில் தில்லை நகர் கிளை, தஞ்சாவூரில் தஞ்சாவூர் மெயின், மேற்கு மெயின் கிளைகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு ‘கவுண்ட்டர்’ வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல், வேலூர், ராமநாதபுரம், கொடைக்கானல், திருவண்ணாமலையில் குறிப்பிட்ட கிளைகளிலும் சிறப்பு கவுண்ட்டர் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் மாமல்லபுரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. கிளை இல்லாததால், மாற்று வங்கி கிளைகள் மூலம் இந்த ஏற்பாட்டை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறும், கட்டணமில்லா தொலைபேசியை (எண்.1800 4253 1111ல்) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தகவல் பெற தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.