காய்ச்சலுக்கு ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குயில்ஹில் பகுதியை சேர்ந்தவர் பாலு, இவர் பெட்போர்டு பகுதியில் தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வைலட் என்ற மனைவியும், அருள்மொழி, கவிதா (வயது 24) என்ற இரு மகள்கள் உள்ளனர். கவிதா எம்.ஏ., முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே எம்.பி.எல்., படிப்பு படிக்க சென்னையில் இருந்து குன்னூருக்கு வந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி, கவிதாவுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கவிதாவை குன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் கொடுத்த மருந்தினால் கவிதாவுக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதனால், கவிதாவின் முகம், உடல் கருப்பு நிறமாக மாற தொடங்கியது.
இதைத்தொடர்ந்து சிகிச்சை அளித்த டாக்டரிடம் கவிதாவை மீண்டும் அழைத்து சென்று சென்றனர். அவர் கவிதாவுக்கு மீண்டும் மருந்து கொடுத்தும் உடலில் ஏற்பட்ட மாற்றம் குணமாகவில்லை. தொடர்ந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கவிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கவிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். கவிதாவின் உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரின் தந்தை பாலு மற்றும் உறவினர்கள் குன்னூர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் சோதனைச் சாவடியில் இருந்த குன்னூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி, குன்னூருக்கு கவிதாவின் உடலை கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர்.
தொடர்ந்து போலீசார் கவிதாவின் பெற்றோரிடம், இறந்த கவிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், அப்போது தான் செல்ல அனுமதிப்போம். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பின்னர் கவிதாவின் பெற்றோர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் கோவைக்கு கொண்டு சென்றனர். அவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் உடன் சென்றார். இன்று கவிதாவின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கவிதாவுக்கு முதலில் குன்னூரில் சிகிச்சை அளித்த டாக்டரின் வீட்டுக்கும், அவருடைய ஆஸ்பத்திரிக்கும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.