அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் – நவநீதம்பிள்ளை!

347 0

தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கும், நீதியையும், இழப்பீடுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளி மூலம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் 1 இலட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் ஆறு தசாப்த காலத்தில் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

இந்த நினைவு தினத்தில் மரணமான தமிழர்களை நாம் கௌரவிக்கும் அதேவேளையில், அவர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்கும், இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்குமான அவர்களுடைய போராட்டத்துக்கு துணைநிற்போம் என அவர் இந்த காணொளி ஊடாக தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் நடைபெற்ற போரின் போது சர்வதேச குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை ஐ.நா. முன்னெடுத்த விசாரணைகள் உறுதிப்படுத்தியிருந்தன என்றும் ஆனால், இது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இதுவரையில் நீதிப்பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அண்மையில் ஒரு சிறுவன் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்தமைக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவரை இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளமையானது, நீதிக்கு எதிரான ஒரு குற்றம் எனவும் நவநீதம்பிள்ளை விமர்சித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் ஒடுக்குமுறைகளால், மனித உரிமை மீறல்களளால் தொடர்ந்தும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளர்கள்.

தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் இதுவரையில் அவர்களிடம் மீளக்கொடுக்கப்படவில்லை. தேசிய கீதத்தை தமிழில் பாடமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் அடக்கப்படுவதால்தான் 200 பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கான நீதியையும், இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுப்பதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.