இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக உலர்ந்த கடலட்டைகளை கடத்தி வந்த நால்வர் பொலிஸாரினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இரண்டு படகுகள் மூலம் கடலட்டைகளை கடல் வழியாகக் கொண்டு வந்து பாலாவி-கல்பிட்டி பிரதான வீதியின் பாலக்குடா சந்தியில் வைத்து வாகனத்தில் ஏற்றுவதற்கு முற்பட்டவேளை பொலிஸார் கடலட்டைகளுடன் நால்வர் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி பொலிசாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு போது 763 கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டதுடன் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 படகுகள் மற்றும் சொகுசு வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கடலட்டைகளை சொகுசு வான் மூலம் கொழும்பிற்கு கடத்திச்செல்ல முற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்தும் கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.