பொது சிவில் சட்டத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் தீட்சிதர்களுக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியினர் பண்ருட்டியில் கடந்த 7-ந் தேதி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை இந்து மக்கள் கட்சியினர் சிதம்பரத்தில் முடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்குகோபுரம் அருகே இந்து மக்கள் கட்சியினர் ஒன்று கூடி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். இதில் தஞ்சை மண்டல அமைப்பாளர் சாமிநாதன், கடலூர் மாவட்ட தலைவர் தேவா, மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், சிதம்பரம் நகர தலைவர் செந்தில், நகர செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இந்து மக்கள் கட்சியினர் தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினர். இதனைப்பார்த்த கோவில் தீட்சிதர்கள் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்து மக்கள் கட்சியினருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து, இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அனுமதியின்றி கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என்று போலீசார் கூறினர்.இதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் கோவிலை விட்டு வெளியேறி கீழசன்னதியில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.