குருதி தோய்ந்த எம் தாய்நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எம் முள்ளிவாய்க்கால் உறவுகளை எழுச்சிபூர்வமாக நினைவுகூர வேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் தமிழினஅழிப்பின் 11ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு மே 18 மாலை ஆறுமணியளவில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனாலும் உலகில் நிகழும் அசாதாரண நிலைமையால் அனைவரதும் பாதுகாப்புக்கருதி நியூசிலாந்து அரசின் அறிவித்தலுக்கமைய மக்களுக்கான பொதுவணக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யமுடியவில்லை. இருப்பினும் நியூசிலாந்து தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் சில அங்கத்தவர்களுடன் மாலை 6.18 மணிக்கு வணக்க நிகழ்வு ஆரம்பமானது. அத்துடன் நிகழ்வுகள் யாவும் நேரலையாக மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக நியூசிலாந்து தேசியக்கொடியினை டிரோன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் தயாகரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து ஈகச்சுடரினை மாவீரன் இளந்தீரனின் சகோதரன் கெளரீசன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ஏனைய அங்கத்தவர்கள் குருதிதோய்ந்த எம் தாய்நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எம் உறவுகளுக்காய் நினைவுத்தூபிக்கு விளக்கேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து ஜெகன் மற்றும் லக்சன் அவர்களின் உரை இடம்பெற்றது. இருவரும் தங்களது உரையில் தாமதிக்கப்படுகின்ற நீதிக்கான தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இறுதி நிகழ்வாக கொடி இறக்க நிகழ்வு இடம்பெற்றது. முடிவில், இத்தமிழின அழிப்பு நினைவுநாளில் முள்ளிவாய்க்கால் எங்கள் தோல்வியின் குறியீடு அல்ல, முள்ளிவாய்கால் விடுதலைப்போரின் முடிவல்ல அதுவே ஆரம்பம், மண்ணை மீட்கும் மறவர்களாக , போர்களத்தில் விட்ட பணிகளை நாம் தொடர்வோம். சர்வதேசம் அமைதியை கலைத்து நமக்கான விடிவை பெற்றுத்தரும்வரை போராடுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நிகழ்வுகள் நிறைவுப்பெற்றன.