திருக்கோவில் பிரதேசத்திலுள்ள விநாயகபுரம் கடலோரக்கிராமத்தில் திடிரென கடல் அலை உட்புகுந்ததனால் கரையிலிருந்த 25 வள்ளங்களை அள்ளிச்சென்றது. மீனவர்கள் பலத்த முயற்றியுடன் கடலுடன் போரிட்டு அந்த வள்ளங்களை மீட்டுக்கரைசேர்த்தனர்.
இதுதொடர்பாக திருக்கோவில் விநாயகபுரம் 03மற்றும் 04 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த குறித்த மீனவர்களால் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு (19)செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.
கிடைக்கப் பெற்ற அறிவித்தலுக்கு அமைவாக குறித்த இடத்திற்கு உடனடியாக விரைந்த திருக்கொவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கடல் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து மீனவர்களிடம் வினவியதுடன் மீன்பிடி வள்ளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். அவருடன் உதவிபிரதேச செயலாளர் கந்தவனம் சதீஸ்கரனும் உடன் சென்றிருந்தார்.
அங்கு ஊகங்களுக்கு கருத்து தெரிவித்த திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் தெரிவித்ததாவது:
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விநாயகபுரம் 03மற்றும் 04 கிராம சேவகர் பிரிவில் உள்ள மீனவர்களின் 25 தொடக்கம் 30 வரையிலான மீன்பிடி வள்ளங்களை வழமைக்கு மாறன கடலலை சீற்றம் காரணமாக கடல் இழுத்துச் சென்றுள்ளது. பின்னர் மீனவர்களால் குறித்த வள்ளங்கள் மீட்க்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டது.
150 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமாக 75 மீன்படி வள்ளங்கள் இயங்குகின்றது . மேற்குறித்த வள்ளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறஜனார்.
மேலும் பிரதேச நிலப்பகுதிக்குள் 40 தொடக்கம் 50 மீற்றர் வரை கடலலைகள் உள்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 20 தொடக்கம் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீனவர்களின் வலைகள் சேதமைந்துள்ளதுடன் 15 இலட்சம் பெறுமதியான வலைகள் கடலைலைகளால் காவு கொள்ளப்பட்டுள்ளதாகவும் 7 மீன்பிடி வள்ளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு நிரந்தரமான ஒரு இடத்தினை ஒதுக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவுமாறு மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கடடலை சீற்றம் காரணமான திருக்கோவில் பிரதேசத்தில் மேற் குறித்த பகுதியில் வசிக்கும் 150 மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களை கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.