லங்கா ஈ நியூஸ் என்ற சிங்கள இணையத்தளத்தை இயக்கும் சந்தருவான் சேனாதீரவைக் கைதுசெய்ய சர்வதேச பிடிவிறாந்தைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் நீதித்துறைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாலேயே நீதிமன்றத்தினூடாக, பிரித்தானியாவில் வசிக்கும் சந்தருவான் சேனாதீரவைக் கைதுசெய்ய பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்படும் என சிறீலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தின்போதே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள இனவாதக் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கிவரும் லங்கா ஈ நியூஸ் சிங்கள மக்கள் மத்தியில் மிகப் பிரபல்யமான இணையத்தளங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இந்த நிலையில் சிறிலங்காவின் நீதித்துறையையும், குறிப்பாக நீதிபதிகளையும் விமர்சித்து வருவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதித் துறைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார் என வழக்குத் தொடர்ந்து குறித்த நபருக்கெதிராக சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.