முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பு 11 ம் ஆண்டு இணைய வழி நினைவு கூரல் – பிரித்தானியா

460 0

உலகத் திசை எங்கும் வாழும் உறவுகள் அனைவரையும் இணைத்து தமிழர் ஒருங்கிணைப்புக்
குழு பிரித்தானியக் கிளையினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து இணைய
வழியூடாக தமிழின அழிப்பு நினைவு நாளின் நினைவு வணக்க நிகழ்வு இன்று ( 18.05.2020 ) நடைபெற்றது.

நிகழ்வினை திரு நவம் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து பிரித்தானியக் கொடியினை திரு.குமரனும், தமிழீழத் தேசியக் கொடியினை இளையோரமைப்பைச் சேர்ந்த திரு. சாரங்கனும் ஏற்றி வைத்தார்கள் . நினைவுச் சுடரினை செல்வி.வசிகா கமல் ஏற்றிவைத்தார் . நினைவுக் கல்லறைக்கான மலர் மாலையினை திரு.கமல் அவர்கள் அணிவித்ததைத் தொடர்ந்து இணைய வழியினூடாக இணைந்திருந்த மக்களும் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்ட நினைவுக் கல்லறைகளுக்கு மலர் தூவி சுடர் வணக்கம் செலுத்தினார்கள் .

தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்க முடியாது அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது. முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் இருந்து தப்பி, இறுதியாக தனது தந்தையைப் பார்த்தபோது வெறும் 4 வயதாக இருந்த செல்வி. கலையரசி கனகலிங்கம் அவர்களின் உரையினை தொடர்ந்து, தமிழீழ மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பயிற்சி பெற்று 1993 ல் இருந்து இறுதி யுத்தம் வரையில் முன்னின்று மருத்துவ துறையில் சேவையாற்றிய தமிழீழ மருத்துவ கலாநிதி ஜோன்சன் அவர்களின் உரையும், திருமதி அன்னலக்ஸ்மி ஜெயபாபு அவர்களின் “எங்களுடைய ஈழ தேசமானது முள்ளிவாய்க்கால் மண்ணில் கொண்ட அவலநிலை” என்ற தலைப்பிலான கவிதையும் இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அனைத்துக் கட்சி நடாளுமன்ற உறுப்பினர் குழுவிலிருந்து திரு. Elliolt Colburn , Harrow கிழக்கு பிராந்திய பழமைவாத கட்சியை சேர்ந்த நடாளுமன்ற உறுப்பினர் திரு. Bob Blackman , Harlow பிராந்திய பழமைவாத கட்சியை சேர்ந்த நடாளுமன்ற உறுப்பினர் திரு. Robert Halfon , தாராளவாத ஜனநாயக கட்சியின் பிரதித் தலைவரும் Kingston and Surbiton பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு . Ed Davey , அவர்களும் உரையாற்றினர். புண்பட்ட மனங்களோடும், வெந்து குமுறும் உணர்வுகளோடும் இன அழிப்பின் குறியீடாகி இருக்கும் முள்ளிவாய்க்காலின் நினைவுகளோடு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி.கீத்தனா அவர்களின் உரையும் இடம்பெற்றது.

அடுத்ததாக எம் நம்பிக்கையின் உரமாக என்றுமே ஒலிக்கும் “நம்புங்கள் தமிழீழம்” என்கின்ற பாடலோடும், தேசியக்கொடிகள் கையேந்தலோடும் தமிழீழம் நோக்கிய உறுதியோடு பயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.