மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையினால் சேகரிக்கப்படும் மிருக எச்சங்களை ஏறாவூர் ஐந்து எல்லைப்பகுதியில் கொட்டப்படுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகளை ஏறாவூர் ஐந்து எல்லைப்பகுதியில் கொட்டுவதால் செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5, சேனைக்குடியிருப்பு, குமாரவேலியார் கிராமம், அம்மன்புரம் போன்ற பகுதிகளில் உள்ள பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் நகரசபைக்கு உட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்படும் மிருகங்களின் எச்சங்கள் குறித்த பகுதியில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்களின் தொல்லை, பாடசாலைகளில் கல்வி கற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அத்துடன் அருகிலுள்ள ஆலயத்திற்குள் மாட்டு எச்சங்களை காகங்கள் எடுத்து வந்து போடுவதால் அசுத்தம் ஆகின்றது, அருகில் உள்ள கிணறுகள் மற்றும் வீடுகளில் காகங்கள் குறித்த எச்சங்களை தூங்கி சென்று போடுவதால் பாதிக்கப்படுகிறோம் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வருகை தந்திருந்தார்.
பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியாது என எச்சரித்தனர்.
குறித்த இடத்திற்கு நகர சபை தவிசாளர் அப்துல் வாஸித் வருகை தந்து வியாழேந்திரன் உடன் கலந்துரையாடிய பின்னர் மக்களுக்கும் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. (150)