வவுனியாவில் இராணுவத்தினரால் 2006 ஆண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து விவசாய கல்லூரி மாணவர்களின் 10 வது வருட நினைவு தினம் இன்று இலங்கை விவசாயக் கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் குமுதினி சந்திரகாந்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
18-11-2006 ஆண்டு ஏ-9 வீதியில் அமைந்துள்ள விவசாயக் கல்லூரிக்கு அருகாமையில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ ட்ரக் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரண்டு அதிகாரிகள் உட்ப ஐந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கு பழி தீர்க்கும் முகமாக வவுனியா விவசாயக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்ட்ட துப்பாக்கி பிரயோகத்தில் எஸ்.கோபிநாத், ஐ.அச்சுதன், ரி.சிந்துஜன், எச்.ஆர்.முகமட், எஸ்.கிந்துஜன் ஆகிய ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டும் பத்து மாணவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக விவசாயக் கல்லூரி மாணவர்கள் இரத்ததானம் செய்யப்பட்டதுடன், மக்களுக்கான தாக சாந்தி நிகழ்வும் நடத்தப்பட்டது