ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலுள்ள தரவுகளை மாற்றிய இளைஞனையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சந்தித்துள்ளார்.
நேற்று பிற்பகல் குறித்த மாணவனை ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து சந்தித்த ஜனாதிபதி அம்மாணவனது விபரங்களைக் கேட்டறிந்தார்.
அத்தோடு அம்மாணவனின் கல்விச் செயற்பாடுகள் வெற்றிபெற ஆசீர்வாதம் வழங்கிய ஜனாதிபதி, அம்மாணவனுக்கு விசேட பரிசொன்றையும் வழங்கி வைத்தார்.
தானே, உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கிய கணனியையே தான் பயன்படுத்துவதாக குறித்த மாணவன், ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன் தனது குடும்பத்தவர் முகம்கொடுக்கும் வீட்டுப் பிரச்சினையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.
பெற்றோரின் பாதுகாப்பின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு குறித்த மாணவன் நன்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் அந்த சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு தேவையான பின்னணி தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் குறித்த மாணவன் ஊடுருவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.