நாட்டில் இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயவு தாட்சண்யம் பாராது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றைய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டில் அண்மைக்காலமாக இனவாத சக்திகளின் செயற்பாடுகள் அதிகரிப்பது தொடர்பிலும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர்.
இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளையும் செவிமடுத்த ஜனாதிபதி, முகப்புத்தகம், இணையதளங்கள் மூலம் இனவாதக் கருத்துகளை செய்திகளாகவோ, கருத்துக்களாகவோ பதிவுசெய்பவர்களை கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும் அவரது செயலாளருக்கு பணித்துள்ளார்.
அத்துடன் இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, நீதி அமைச்சருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கு விளக்கமளித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டனை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலும் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின், புதிய சட்டம் வரும்வரை காத்திராமல், நாட்டில் இனவாதம் பேசுவோருக்கு எதிராக, உடன் செயல்படும்படி, ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்