இந்தியாவையே உலுக்கிய புகைப்படம்…

329 0
உயிரிழந்த தனது ஒன்றரை வயது குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கவேண்டும் என நினைத்தும் சொந்த ஊருக்கு செல்ல முயலாமல் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் நிலைமையை இந்த புகைப்படம் எடுத்துக்கூறுகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் போக்குவரத்து முடக்கத்தால் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அரசு தரப்பில் இருந்து சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அவை போதுமானதாக இல்லை என்ற பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது.
இதன் காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவும், சைக்கிள், பைக்குகள் மூலமும் சென்ற வண்ணம் உள்ளனர். இவர்களை மாநில எல்லைகளிலேயே போலீசார் தடுத்துநிறுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த தனது ஒன்றரை வயது மகனை கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்காக தனது சொந்த ஊருக்கு செல்ல முயன்று முடியாமல் தவித்து நின்ற ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் அதுல்யாதவ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் பீகார் மாநிலம் பிகுசாராய் பகுதியை சேர்ந்த ராம் புகர் பண்டிட் (38) ஆவார். இவருக்கு 3 பெண் குழந்தைகளும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. ராம் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளராக கட்டிட வேலை செய்து வந்தார்.
இதற்கிடையில், கடந்த திங்கள்கிழமை ராமின் மனைவி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஒன்றரை வயது மகன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார்.
இதனால் தனது மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ராம் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய ரெயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படாததால் அவர் சாலைவழியாக சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார்.
இதனால் உடனடியாக டெல்லியில் இருந்தது தனது பயணத்தை தொடங்கிய ராம் டெல்லி-உத்திரபிரதேச மாநிலம் எல்லையான காசியாபாத் பகுதியை அடைந்தார். ஆனால் அவர் உத்தரபிரதேசத்திற்குள் நுழைய அம்மாநில போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் அவர் இரு மாநில எல்லையிலேயே மூன்று நாட்கள் கழித்துள்ளார்.
இதற்கிடையே, ராம் உயிரிழந்த தனது மகனை பார்க்க முடியாமல் கண்ணீருடன் தனது மனைவியுடன் பேசுவது போன்று எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த டெல்லி போலீசார் ராமை கண்டுபிடித்து டெல்லியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பீகார் செல்லும் சிறப்பு ரெயில் அவரை கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைத்தனர்.
இறுதியாக, தனது சொந்த ஊரான பிகுசாராய் சென்றடைந்த ராமிற்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. தந்தை வர தாமதம் ஆனதால் நாங்களே ஒன்றரை வயது மகனுக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்து விட்டதாக ராமின் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறினர்.
தனது ஒன்றரை வயது மகனின் முகத்தை கடைசியாக எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என எண்ணி பல இன்னல்களை சந்தித்து வந்த ராமின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே போனது மிகவும் கொடிய நிகழ்வாகும்.