மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு தடை

377 0

ஹட்டன் காசல்ரி பிரதான வீதியில் காசல்ரி கொலனி பகுதியில் இன்று (18) திகதி காலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த மின் கம்பம் வீழ்ந்ததன் காரணமாக ஒஸ்போன், நோட்டன் பிரிஜ், லஷ்பான உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டு பகுதிக்கு தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து இப்பகுதிக்கு இன்று அதிகாலை கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.

காற்று காரணமாக பெரிய மரம் ஒன்று மின் கம்பிகளின் மீது முறிந்து வீழ்ந்துள்ளதனால் இந்த மின்கம்பம் முறிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியினுடாக பயணித்து வாகனங்கள் பல மணித்தியாலங்கள் காசல்ரி பகுதியில் தறித்து நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மின் கம்பம் முறிந்ததன் காரணமாக பல பகுதிகளுக்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த மின் கம்பத்தை திருத்துவதற்கு மின்சார சபையினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.