பொது தேர்தலுக்காக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதியில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை, ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அது அமையும் என சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் கூடியிருந்த தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செயற்பட வேண்டும் என்று முடிவு செய்தது. இதைக் கருத்திற் கொண்டு, நிலைமையை மதிப்பாய்வு செய்ய ஆணைக்குழு மீண்டும் புதன்கிழமை மற்றொரு கலந்துரையாடலை நடத்தும் என கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து வாரங்கள் அல்லது 35 நாட்கள் பிரச்சாரத்திற்கான குறைந்தபட்ச காலம், ஆனால் ஜூன் 20 க்கு முன்னர் சாத்தியமில்லை என்றும் இருப்பினும், நீதிமன்றின் உத்தரவை தவிர ஜூன் 20 அன்று நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சந்தேகம் எனவும் அவர் கூறினார்.
மேலும் தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட முடிவை சவால் செய்யும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டமையானது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்குகள் நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றது.
தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டால் – வரவிருக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒரு நான்கு அம்ச விடயங்களை ஆணைக்குழு பின்பற்றும் என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த முடியுமா, போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் பிரசாரங்களை நடத்த போதுமான காலம் உள்ளதா, தேர்தல்களை நடத்துவதற்கு உகந்த சூழல் இருக்கிறதா, தேர்தல்கள் தொடர்பான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியுமா என்பது குறித்து ஆணைக்குழு ஆராயும் என அவர் கூறினார்.
இந்த ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கு முன்னர் பொது சுகாதார அதிகாரிகள், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார மருத்துவ அதிகாரிகள், சமூக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.