முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; ‘கோவில் மணிகளை ஒலிக்கவும்

291 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நாளை (18) இரவு 07 மணிக்கு கோவில்கள், தேவாலயங்களில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் மணிகளை ஒலிக்கச் செய்து, அஞ்சலி செலுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் சார்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “மே 18ஆம் திகதி, தங்கள் வீடுகளில் மாலை 06 மணி தொடக்கம் இரவு 07 மணி வரையான காலத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தவும்.

“போர் அவலங்களுக்கு மத்தியிலே, உணவுக்கு வழியின்றி, வெறும் கஞ்சியைக் குடித்து எமது உறவுகள் உயிர்காத்த கொடுமையை நினைவுகூரும் முகமாக இன்றையதினம் ஒரு நேரத்துக்கு கஞ்சியை மட்டும் அருந்துங்கள்.

“வழமையாக நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில், கோவில்களில் பிரார்த்தனை, அன்னதானம் போன்ற நிகழ்வுகளுடன், முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஸ்டிப்போம்.

“இம்முறை கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டியுள்ளது. எனவே, நாமெல்லாம் ஓரிடத்தில் கூடி அஞ்சலி செய்ய முடியாத நிலையிலுள்ளோம்.

எனவே, மேற்கூறிப்பிட்ட விடயங்களை வடக்கு, கிழக்கிலுள்ள எல்லாத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிர்வாகத்தினரும் கருதிற்கொள்வும். மேற்படி விடயங்கள் நடந்தேற உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நாடுகின்றோம்” என்றார்.