ஊரடங்கு தளர்வு – பாகிஸ்தானில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது

297 0

உள்நாட்டு விமான சேவையை பகுதியளவு செயல்பட பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா அண்டை நாடான பாகிஸ்தானிலும் சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதுடன், உள்நாட்டு, சர்வதேச விமானப்போக்குவரத்தையும் அந்நாடு முடக்கியது. இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும், ஊரடங்கை படிப்படியாக தளர்த்தப்போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

அதன்படி, உள்நாட்டு விமான சேவையை பகுதியளவு செயல்பட பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா, பெஷாவார் ஆகிய 5 முக்கிய நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போது இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.