தமிழகத்தில் இந்தாண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என நெல்லையில் சீமான் பேட்டியளித்துள்ளார்.
வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று நெல்லை டவுணில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் வ.உ.சி.சிலைக்கு நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடிபட்டு கிடந்த நமது தேச விடுதலைக்காக போராடிய மாபெரும் வீரர், மாடு கூட இழுக்க சிரமப்பட்ட செக்கை இழுத்த தியாகி வ.உ.சிதம்பரனார் போல இனி ஒருவரும் பிறக்க முடியாது.
கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் சரியானது அல்ல. மத்திய அரசு தனியார் மயம், தாராளமயம், உலக மயம் என்ற கொள்கைகளை வைத்துக் கொண்டு ஊழலை எதிர்ப்போம் கறுப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு உலக மயமாக்கல் என்ற கொள்கையை மாற்றிக் கொண்டாலே போதும். செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றச்சென்ற அப்பாவி பொதுமக்கள் 40 பேர் பலியாகிவிட்டனர். இதுவேதனைக்குரியது.
பணம் மாற்றவரும் மக்களுக்கு மை வைப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயல். இந்த விஷயத்தில் மத்தியஅரசு மேலும் மேலும் தவறு செய்து வருகிறது. லலித்மோடி, விஜய்மல்லையாவை வெளி நாட்டிற்கு அனுப்பியது இவர்கள்தான்.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில்அ.தி.மு.க., தி.மு.க. பணத்தை வாரி வழங்கிவிட்டது. இதே நிலைநீடித்தால் மக்களிடையே புரட்சி ஏற்படுவதை தடுக்கமுடியாது. தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மசோதா தர நிர்ணய சட்டம் உள்ளிட்டவற்றை தமிழக அரசு எதிர்த்தது. ஆனால் தற்போது இதற்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் கையெழுத்து போட்டுள்ளார்கள்.
இடைத்தேர்தலை மையப்படுத்தியே முதல்வர் பெயரில் அறிக்கை வந்துள்ளது. விவசாயத்தையும், விவசாயிகளையும் புறக்கணித்து நாட்டில் எதுவும் செய்யமுடியாது. ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது நமது நாட்டின் மாட்டினங்களை அழிக்கும் செயல். காளைகளை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். இந்தாண்டு தமிழகத்தில் தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவோம்.இவ்வாறு சீமான் கூறினார். அப்போது அவருடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தூத்துக்குடி வெற்றிச்செல்வன், இளைஞர் பாசறை சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.