வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தமிழகத்தில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரி வித்தார். இதுதொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 477 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 93 பேர் ஆவர்.ஈரோடு மாவட்டத்தில் 31 நாட்களாகபுதிய வைரஸ் தொற்று இல்லை.திருப்பூரில் 15 நாட்களாகவும்,கோயம்புத்தூரில் 13 நாட்களாகவும், சேலம் மற்றும் திருவாரூரில் 10 நாட்களாகவும், நாமக்கல் மற்றும் நீலகிரியில் 7 நாட்களாகவும், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரில் 6 நாட்களாகவும், திருச்சியில் 4 நாட்களாகவும், அரியலூரில் 3 நாட்களாகவும், கரூர் மற்றும் ராமநாதபுரத்தில் 2 நாட்களாகவும், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில தினங்களாகவும் புதிய வைரஸ்தொற்று இல்லை. ஆனால், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களை பரிசோதனை செய்யும்போது, புதிய வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன.