ஆவாக் குழுவெனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஆவாக் குழு எனச் சந்தேகிக்கப்படுபவர்களில்களில் பலர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத நிரபராதிகள் எனவும், உண்மையான ஆவாக் குழுவை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கில் அண்மைக்காலமாக கொலை, வாள்வெட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஆவாக் குழு என அழைக்கப்படும் குழு ஈடுபட்டுவருகின்றது. இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் நாள்தோறும் கிடைக்கப்பெறுகின்றன. அதன்படி பல்வேறு கைதுகளும் தொடர்ந்து வருகின்றன.
ஆனால் இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்களில் பலர் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடாதவர்கள். ஆகவே இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவதை நிறுத்தவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.