யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட என்னை வெளிநாட்டில் உள்ளவர்கள் புலிக்கொடி ஏந்தியவாறு என்னைக் கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என மட்டக்களப்பு மள்ளாராமய தேரர் தெரிவித்துள்ளார்.
கிராமசேவகரூடாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஆறு சிங்களக் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்சிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துவிட்டு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஆவேசமடைந்த குறித்த பிக்கு, யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி, அவர்களின் காயத்திற்கு மருந்திட்ட என்னை அக்காலத்திலேயே தேரர் ஒருவர் புலிப் பயங்கரவாதி என வழக்குத் தொடுத்தார்.
அதேபோல் தற்போது என்னுடைய மக்களின் பிரச்சனைக்காக போராடும் என்னை இனவாதி என மக்களிடம் பொய்க் கதைகளைச் சித்தரித்து வருகின்றனர். இதனால் வெளிநாட்டிலிருப்பவர்களிடமிருந்து எனக்குக் கொலை அச்சுறுத்தல் வருகின்றது.
எனது மக்களுக்காக நான் இறக்கவும் தயாராக உள்ளேன். இதற்கெல்லாம் நான் அஞ்சியவன் அல்ல.
நான் இனவாதியோ மதவாதியோ அல்ல. தமிழ் மக்களுக்கு எதிரானவனும் அல்ல. சிங்கள மக்களின் உரிமைகளுகாகவே போராடுகிறேன் இதனை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நியாயம் பெற்றுக்கொடுக்க நினைத்ததினாலேயே நான் இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றேன். தங்களை நான் அச்சுறுத்தவில்லை. மாறாக கோரிக்கையாகவே முன்வைக்கின்றேன். இப்பகுதியில் முஸ்லிம் மற்றும் தமிழ் அதிகாரிகளே பதவியில் உள்ளனர்.
சிங்கள அதிகாரிகள் இல்லையென்பதால் பாரபட்சம் காட்டாது, இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்வரை இந்த அப்பாவி மக்களுக்கு எதிராக யாரும் செயற்படவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.