தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடா?- சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்

283 0

தமிழகத்தில் ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை என்றும், 2 லட்சத்து 23 ஆயிரம் உபகரணங்கள் கையிருப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் 3 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் பரிசோதனை உபகரணங்கள் இல்லை என்றால் அனைவருக்கும் நோய் பாதிப்பு இல்லை என்று முடிவு கூறுங்கள் என்று கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பரிசோதனை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது 2 லட்சத்து 23 ஆயிரத்து ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் இருப்பு உள்ளது. மேலும் 11 லட்சம் ஆர்.டி.பி. சி.ஆர். உபகரணங்களை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 1 லட்சம் என்ற அடிப்படையில் இந்த உபகரணங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த உபகரணங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்படும். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் நடைபெறும். மேலும் சீனாவில் இருந்து 24 ஆயிரம் துரித பரிசோதனை கருவிகள் (ராப்பிட் கிட்) வாங்கி இருந்தோம். அதில் 5 ஆயிரம் கருவிகள் பயன்படுத்தப்பட்டுவிட்டன. மீதம் இருந்த 19 ஆயிரம் கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டு, அதற்குரிய பணமும் திரும்பப் பெறப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.