டாஸ்மாக் நிறுவனம் பெயரில் போலி இணையதளம்- கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு

299 0

டாஸ்மாக் நிறுவனம் பெயரில் போலியான இணையதளம் ஆரம்பித்து, ஆன்லைன் மூலம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்போவதாக விளம்பரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிறுவனம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆன்லைன் மூலம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்போவதாக விளம்பரம் வெளியாகி உள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரில் போலியான சில இணையதளம் தொடங்கப்பட்டு, இது போன்ற விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது.

டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் மனு மீது துணை கமிஷனர் நாகஜோதி தலைமையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கி விட்டனர்.

போலியான இணையதளங்கள் முடக்கப்பட்டன. இந்த இணையதளத்தை உண்மையானது என நம்பி ஏராளமான மது பிரியர்கள் மது பாட்டில்கள் கேட்டு பணமும் கட்டி விட்டதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் மூலம் மதுபாட்டில் விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போலியான இணையதளத்தை தொடங்கிய நபர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.