சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் பாண்டா கரடிகள்

323 0

கனடாவில் மூங்கில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 2 பாண்டா கரடிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

கனடா-சீனா இடையிலான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த 2014-ம் ஆண்டு சீனாவில் இருந்து 2 பாண்டா கரடிகள் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எர் ஷைன் மற்றும் டா மாவோ என்று பெயரிடப்பட்ட இந்த 2 பாண்டா கரடிகளும் டொரோண்டோவில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 ஆண்டுகளை கழித்தன. அதன்பிறகு 2018-ம் ஆண்டு இறுதியில் கல்காரி உயிரியல் பூங்காவுக்கு இந்த பாண்டா கரடிகள் மாற்றப்பட்டன.

இந்த 2 பாண்டா கரடிகளும் மூங்கில்களை விரும்பி சாப்பிடும். ஒவ்வொரு பாண்டா கரடியும் நாள் ஒன்றுக்கு 40 கிலோ வரை மூங்கில்களை உணவாக எடுத்துக்கொள்ளும் என உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறுகிறது. பாண்டா கரடிகளுக்காக சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டு வந்தன.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கனடா-சீனா இடையிலான விமானப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் பாண்டா கரடிகளுக்கு மூங்கில் கிடைக்காமல் போனது. வேறு வழிகளில் மூங்கில்களை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

எனவே 2 பாண்டா கரடிகளையும் சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறும் உயிரியல் பூங்கா நிர்வாகம் அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.