கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை-ஆறுமுகம் தொண்டமான் (காணொளி)

322 0

sequence-01-still013தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டவையை மதித்து நடக்காத தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்க மற்றும் சட்ட நடவடிக்கையை எடுக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அட்டனில் சூளுரை விடுத்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை அடக்கு முறைக்குள் கொண்டு வரும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் பேரணியுடன் போராட்டம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு ஒன்று அட்டனில் நேற்று இ.தொ.காவின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

இதன்போது அட்டன் டீ.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற ஒப்பந்தம் தொடர்பிலான தெளிவூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் நலன்கருதி கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதில் 500 ரூபாய் அடிப்படை சம்பளம் அடங்களாக ஏனைய கொடுப்பனவுகளுடன் 730 ரூபாய் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அத்தோடு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என 75 ரூபாய் உள்ளடக்கப்பட்டு 805 ரூபாய் சம்பளமாக கிடைக்க கையொப்பம் இடப்பட்டுள்ளது. அதேவேளை தொழிலாளி ஒருவர் மேலதிகமாக 10 கிலோ தேயிலை கொழுந்தை பறிக்குமிடத்து மேலதிக கிலோவிற்கு வழங்கப்படும் 25 ரூபாய் தொகையின் ஊடாக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கிட்டும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் சட்ட விதிகள் மற்றும் ஒப்பந்த விதிகளை மீறி தொழிலாளர்களிடம் நாளொன்றுக்கு 18 கிலோ தேயிலை வேண்டும் என நிர்வாகங்கள் தொழிலாளர்களை அடக்கு முறைக்குள் கொண்டு வருகின்றது.

ஆனால் 18 கிலோ தேயிலை வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் ஒப்பந்த விதிகளை மீறும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்கம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்காலத்தில் மேற்கொள்ளும்.

இதேவேளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் இதற்கான தீர்வினை காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், தொழில் ஆணையாளர் மற்றும் தேயிலை சபைக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு தீர்க்கமான முடிவு எட்டாவிடின் 10 நாட்களில் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆக தோட்ட தொழிலாளர்கள் 18.11.2016 அன்று முதல் ‘நோம்’ அடிப்படையில் நளொன்றுக்கு ஒப்பந்தத்திற்கு முன் வழமையாக பறிக்கப்பட்ட கொழுந்தினை பறிக்க வேண்டும் எனவும் அதற்கு மேலதிகமாக கொழுந்தினை பறிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க இ.தொ.காவின் ஊடாக தோட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை கமிட்டி மற்றும் தோட்ட கமிட்டி, தலைவிகள் ஊடாக நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் பறிக்கப்படும் கொழுந்தின் நிறையில் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம்.

தேயிலை விலை ஏற்றம் இல்லாததன் காரணமாகவே சம்பள பிரச்சினை உரிய வேளையில் முடிக்க முடியாமல் இருந்தது. ஆனாலும் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தில் தோட்டம் துப்பறவு செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஒற்றுமை காணப்படும் பட்சத்தில் நமக்கான பிரச்சினைகளை வெற்றிக் கொள்ள முடியும். அரசாங்கம் 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஆரம்ப காலத்தில் தோட்டப்பகுதிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என எம்மிடம் கேட்பார்கள்.

இம்முறை அது நடந்ததா என தெரியவில்லை. நமது பூர்வீக சொத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக்கொடுத்தால் நாதியற்று போய்விடுவோம் என்றும் இன்று தோட்டப்பகுதிகள் நிர்வாகங்களால் மூடப்பட்டு வருகின்றது. இதற்கு காரணவாழிகள் நாமாகவே இருக்கின்றோம் என்பதினையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.