மே 18ஐ நெஞ்சில் நிறுத்த வாருங்கள்-மாவை

307 0

“ஒடுக்குமுறைக்குள்ளான ஒரு இனம் தங்கள் தேசத்தின் விடுதலைக்காக திடசங்கற்பம் கொண்ட மக்கள் இலங்கையிலும், உலகில் எங்கிருந்தாலும் மே 18ம் நாளை நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்த வேண்டும்.”

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று (15) வெளியிட்ட அறிக்கையில்,

தமிழின விதலைப் போராட்டம், தமிழ்த் தேசத்தின் சுதந்திர மீட்சிப் போராட்டம் தொடங்கி ஏழு தசாப்தங்களை எட்டி விட்டது. முப்பது ஆண்டுகள் ஜனநாயக அறவழிப் போராட்டங்கள் அரசுகளின் இராணுவ அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளானது. இனக்கலவரங்கள் தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக 1958லிருந்து 1983வரை நாடு முழுவதும் பலதடவைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அடக்கு முறைக்கு அடங்க மறுத்து எழுச்சி கொண்ட தமிழ் இளைஞர் சமுதாயத்திலிருந்து எழுந்த ஆயுதவழிப் போர் முப்பது ஆண்டுகள் மூன்று தசாப்தங்களையும் கடந்து சர்வதேசம் வரை எட்டி நின்றது.

சர்வதேச அனுசரனையுடன் இலங்கை அரசுக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே 2002ல் போர்நிறுத்தமும் இலங்கைத் தமிழர் தேச மக்கள் விடுதலைக்குப் பேச்சுக்களும் உடன்பாடுகளும் நோர்வே ஒஸ்லோ நகரில் இடம்பெற்றது. ஜனநாயக சக்திகளும் போராட்ட சக்திகளும் ஒன்றுபட்டு உயர்ந்து நின்றன. தமிழர் உச்ச பலம் வெற்றியின் விளிம்பில் மீண்டும் ஏமாற்றம் – மீண்டும் மூண்டது போர்.

சர்வதேச சந்தர்ப்பம் தடுமாறிய நிலையில் 2009 மே 18ல் தாயக மண்ணில் இலட்சக்கணக்கில் எம் தமிழ் மக்கள் விடுதலைக்கு வித்துடலங்களாய் வீழ்ந்தன. அந்த உச்ச விடுதலை விளைநிலத்தின் அடையாளம் தான் முல்லையில் முள்ளிவாய்க்கால் முற்றம். அங்கும் விடுதலை வேண்டிய ஆத்மாக்களுக்கு அஞ்சலி நினைவேந்தல் சுடரேற்றம் ஆண்டுதோறும் இடம்பெறுகிறது.

இலங்கையிலும் உலக நாடுகளிலும் தமிழின விடுதலைப் போரில் உயிரைப் பலிகொடுத்தவர்கள், அவர்கள் குடும்பங்கள், பாதிக்கப்பட்ட போராளிகள், அங்கவீனர்கள், காணாமல் போனோரின் குடும்பங்கள் தமிழின விடுதலை மீது விசுவாசம் கொண்டவர்கள் பல இலட்சம் குடும்பங்கள் மே.18ல் கண்ணீர் அஞ்சலி செலுத்துவர். வாழ்நாள் முழுவதும் கண்ணீருடன் துன்பதுயரத்துடன் வாழ்கின்றனர்.

தமிழகத்தில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் பெரியார் பழ. நெடுமாறன் தலைமையில் அறக்கட்டளையினால் உருவாக்கப்பட்டு நிருவகிக்கப்படுகிறது. அதுபோல் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். சர்வதேச தமிழ் மக்களும் நிச்சயம் அந்த நினைவிடத்திற்கு உதவியாயிருப்பார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஒன்று கூடுவதற்கு கட்டுப்பாடுகளுண்டு. அஞ்சலிப்போர் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும். திரளாக மக்கள் நடமாடுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். மருத்துவ நிபுணர் அமைப்புக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியே நடத்தல் வேண்டும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

எங்கும் 210 நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இலங்கையிலும் அதே நிலமைகள் தான். ஆயினும் மே 18ஆம் நாளை நாம் நினைவுகூர்ந்தேயாகவேண்டும்.

அடக்குமுறை ஒடுக்குமுறைக்குள்ளான ஒரு இனம் தங்கள் தேசத்தின் விடுதலைக்காக விடிவுக்காகத் திடசங்கற்பங் கொண்ட மக்கள் இலங்கையிலும், உலகில் எங்கிருந்தாலும் மே 18ஆம் நாளை நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்த வேண்டும். விடுதலை பெற அர்ப்பணிப்போமென திடசங்கற்பத்துடன் உறுதி பூணவேண்டும். 18.18.18 மணி நேரத்தில் அந்த அஞ்சலியை நிறைவு செய்ய வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி தமிழின விடுதலைக்கு வித்துடல் விதைத்த அந்த மக்கள் ஆத்மசாந்திக்காக நீர் ஏரி, கடல் ஓரங்களில் ஈமக் கடனியற்றுவோர், கோவில்களில், வீடுகளில் அமைதியாக விளக்கேற்றி அஞ்சலிப்போம்;.

முள்ளிவாய்க்காலிலும் அந்தந்த மாவட்டங்களிலும் வீடுகளிலும் அமைதியாகச் சுடரேற்றிப் பிரார்த்தித்து அஞ்சலி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். – என்றுள்ளது.