சிங்களவர்களை அச்சுறுத்தி தமிழரின் அச்சத்தை வெல்ல முடியாது-பசில்

320 0

basilசிங்கள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, தமிழர்களின் அச்சத்தை போக்க முடியாது என பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பு இராஜகிரிய பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பசில் ராஜபக்ச,

பாதுகாப்பு குறித்து அனைவரிடத்திலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த அச்சத்தை போக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார். முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு செல்ல முடியாத சூழ்நிலை கூட காணப்பட்டது. 48 மணித்தியாலங்களில் சிறு பைகளில் பொருட்களை எடுத்துக் கொண்டு லட்சக்கணக்கான மக்களை விரட்டியடித்தார்கள்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே அவர்களை மீள்குடியமர்த்துவதற்கான முதற்கட்ட பணிகளை ஆரம்பித்திருந்தார். எனினும், அந்த நிலைமை இன்று இல்லாது போயுள்ளது. பலதரப்பட்ட கருத்துக்களினால், வடக்கில் சிங்கள மக்களுக்கு வாழ அச்சமாக சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ் மக்கள் சில விடயங்களில் அச்சம் கொண்டுள்ளனர். முஸ்லிம் மக்களும் அதைவிடவும் பாரிய அச்சத்தை கொண்டுள்ளனர். எந்தவொரு இனத்திற்கும் அச்சமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவமே எமது கட்சியின் பிரதான நோக்கமாகும். முதலில் சிங்கள மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும். பெரும்பான்மை இனத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தி, சிறுபான்மை இனத்தின் அச்சத்தை போக்க முடியாது. அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அந்த நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அச்சத்தை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எமது கட்சி எந்த நேரத்திலும் தயாராக உள்ளதென்றும் குறிப்பிட்டார்.