முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நினைவுகூரல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.
முதல் நிகழ்வாக பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச் சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து, செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன், மகளிர் அணி பொறுப்பாளர் வாசுகி சுதாகரன், துணைத் தலைவி கிருபா கிரிதரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் றஜிதா விஜயழகன், வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் இ.முரளீதரன் உட்பட பலரும் சுடர் ஏற்றியதுடன் மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
கடந்த 1995ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சுக்கு இலக்காகி நாகர் கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் 21 பேர் படுகொலையாகியிருந்தனர்.
அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாகவும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, நினைவுகூரல் நிறைவுற்று சில மணிநேரங்களின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
எனினும், நினைகூரல் நிறைவுற்றதால் அவர்கள் முரண்பாடு ஏதும் இன்றி திரும்பிச் சென்றதுடன் இன்றைய தினம் நாகர்கோவில் கிராமத்திற்குச் செல்வோர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நாகர்கோவில் சந்திப் பகுதியில் வைத்து ஆள் அடையாளம் பரிசீலிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.