1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத ஈரநினைவு நாள் இன்று .
நீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை
மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக 35 ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம் குமுதினிப் படுகொலை 35 ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது.
குமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இறங்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற்றப்பட்டு திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குமுதினியின் சில பணியாளர்கள் தாங்கியிருக்கின்றனர். இவர்களிடம் செல்லும் சிறிலங்கா கடற்படையினர் 1985ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் தப்பிய படகுப் பணியாளர் எங்கே இருக்கிறார் என விசாரிக்கின்றனர். அதேபோல் குறிகட்டு வான் இறங்குதுறையிலும் நைனாதீவு சிறிலங்காக்கடற்படை இறங்குதுறையிலும் அந்த தப்பிய படகுப்பணியாளரைப்பற்றி தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் விசாரித்தே வருகின்றனர். இது ஏன்?.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது.
இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.
குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம் கோடரிகளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப் போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்த மக்களும் உண்டு.
இச்சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதிசெய்யப்பட்டு போடப்பட்டு உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.
ஒருவர் நுழைவாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழு மாதக் குழந்தைமுதல் வயோதிபர்களைவரை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு நீதி மறுக்கப்பட்ட பல்வேறு அத்துமீறல்களில் ஒன்றாக குமுதினிப் படுகொலையும் ஆகிப்போனதே தவிர, நீதியும், கொல்லப்பட்டவர்களின் கடைசி விசும்பல்களுக்கான பதிலும் இதுவரை கிடைக்கவே இல்லை.