சிறிலங்காவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை – சுகாதார அதிகாரிகள்

328 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை என சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரிவினருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழங்கப்படும் ஆலோசணைகளுக்கு அமைய கொரோனாவை தடுக்கும் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு இந்த விடயமே சான்று என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் படிப்படியாக முடக்கத்தை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை பிராந்திய அளவில் பொது சுகாதார ஆய்வாளர்கள் ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படும் என்று அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, மழை காலம் ஆரம்பித்துள்ளதால், டெங்கு நோய் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால் டெங்கு ஒழிப்பு திட்டங்களில் கவனம் செலுத்துமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.