மட்டு மாநகர சபையில் முள்ளிவாய்கால் வார மௌன அஞ்சலி!

362 0

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 33 ஆவது சபை அமர்வானது இன்று (14) காலை மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக இம்முறை நகர மண்டபத்தில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், சமூக இடைவெளியினைப் பேணியவாறு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியாசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

இவ்வமர்வின் விசேட அம்சமாக 2020க்கான ஆதனவரி செலுத்தலில் முதலாம் காலாண்டுக்கான வரி செலுத்தும் காலமானது நிறைவுறுகின்ற நிலையில், இக்காலப் பகுதிக்குள் நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டிருந்தமையையும் கவனத்தில் கொண்டு, அவ் வரியினை தண்டப் பணமின்றி அறவீடு செய்து கொள்ளும் வகையில் அக்காலப் பகுதிக்கான தண்டப் பண விலக்களிப்புச் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் கொரோனா நோய்ப் பரவலினைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கட்டட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கு செயற்பாட்டை இணைய வழி (Online) முறைமைக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் மாற்றம் செய்து கொள்ள மாநகர முதல்வரால் முன்வைக்கபட்ட வேண்டுகோளும் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களினது முழுமையான பங்குபற்றுதலுடன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.