தமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை

709 0

“தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்” என்ற தொனியிலான உரையாடல் பரப்பொன்று, கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் விரிந்திருக்கின்றது. அதை, முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான விளைவுகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.

ஏனெனில், தமிழ்த் தேசியம் என்கிற அரசியல் சித்தாந்தத்தை ஆயுதப் போராட்டங்களில் வழியாக, நான்கு தசாப்தங்களாக முன்னிறுத்திக் கொண்டிருந்த தரப்பொன்று, சடுதியாக அந்தப் போராட்ட வடிவத்திலிருந்து விலக்கப்படும் போது, எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல் இதுவாகும்.

முள்ளிவாய்க்கால் முடிவுகளைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு, 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ்த் தேசியமும் அதன் அரசியலும், இன்னமும் முள்ளிவாய்க்காலுக்குள் நின்றுகொண்டுதான் விடயங்களை அணுகிக் கொண்டிருக்கின்றன.

இது தவிர்க்க முடியாதது ஆகும். ஏனெனில், முள்ளிவாய்க்கால் என்பது, மாபெரும் மனிதப் பேரவலத்தின் சாட்சியான பூமி மாத்திரமல்ல; அது, தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டங்களை, எப்படி முன்நகர்த்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் களமும் ஆகும்.

ஆனால், இந்தக் களத்தையும் இதை அடியொற்றிய சரியான நகர்வையும் தமிழ்ப் தரப்பு, துரிதமாகக் கண்டடைந்திருக்கின்றதா என்பது பெரிய கேள்வியே!

சுதந்திர இலங்கையில், ஈழத் தமிழர்களின் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டது. தங்களை முழுமையான இடதுசாரியாகவோ, லிபரல்வாதியாகவோ முன்னிறுத்தும் அல்லது, இன்னொரு சித்தாந்தத்தையோ தமிழ்த் தேசியம் என்கிற விடயத்தைப் புறந்தள்ளிக் கொண்டு பேசவோ, செயற்படுத்தவோ முடியாது.

ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது, பௌத்த – சிங்கள மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிராக முளைத்ததொன்று. அதற்கு, அடிப்படைவாதம் என்கிற சிந்தனை இல்லை. அதுபோல, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படைகளோடு மாத்திரம் தங்கியிருக்கும் நிலைப்பாடுகளும் இல்லை.

பௌத்த – சிங்கள தேசியவாதம் நிலைபெறும் வரையில், அல்லது கடைசித் தமிழன் இருக்கும் வரையிலும், தமிழ்த் தேசியம் என்கிற விடயம் நிலைபெறும்.

தமிழ்த் தேசியம், தனக்கென்று தனித்த ஒரு பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், அது பொருளாதாரச் சிந்தனைகளை முன்னிறுத்திக் கொண்டு, எழுச்சிபெற்ற ஒன்றல்ல. தமிழ்த் தேசியம், இடதுசாரிகளின் சிந்தனைகளையும் லிபரல்வாதத்தையும் அதன் தேவைப்பாடுகள் சார்ந்து உள்வாங்கிப் பயணித்து வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியம், நிலைபெற்றுவிட்ட கடந்த 80 ஆண்டுகளில் அதுதான் நிலைமை.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், அன்றைய ராஜபக்‌ஷ அரசாங்கம், தமிழ் மக்களைப் பொருளாதார அடிப்படையில் அணுகுவதன் மூலம், வெற்றி கொள்ள முடியும் என்று கருதியது. அதை அடிப்படையாகக் கொண்டு, “கிழக்கின் உதயம்”, “வடக்கின் வசந்தம்” என்கிற பெயர்களின் பஷில் ராஜபக்‌ஷ இறங்கி வேலையும் பார்த்தார். “காப்பட்” வீதிகள் தொடங்கி, நிவாரணங்கள் வழியாகத் தமிழ் மக்கள் இதுவரை தாங்கி நிற்கின்ற தமிழ்த் தேசிய அரசியலை, நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்றும் நம்பினார்கள். அதன்மூலம், அரசியல் தீர்வு, உரிமை என்கிற விடயங்களைப் பேசாத ஒரு நிலையைப் பேணி, பெளத்த – சிங்கள வாதத்தை, இலங்கையின் ஒற்றைச் சித்தாந்தமாக முன்னிறுத்திக் கொள்ளவும் ராஜபக்‌ஷக்கள் விளைந்தார்கள். அதற்காக, அபிவிருத்தி அரசியலை மாத்திரம் பேசும் நபர்களையும் களமிறக்கிச் செயற்பட்டார்கள்.

ஆனால், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் சித்தாந்தமான தமிழ்த் தேசியத்தை ராஜபக்‌ஷக்களால் தோற்கடிக்க முடியவில்லை. ஏனெனில், அது வெற்றி, தோல்விகள் சார்ந்து நிலைபெற்ற ஒன்றல்ல. அது, இறுதிக் கணம் வரையில், நிலைத்திருப்பது சார்ந்து எழுந்த அரசியல் சித்தாந்தம் ஆகும்.

தமிழ்த் தேசியம், பாராம்பரிய அடையாளங்கள், சுயநிர்ணய உரிமைகளை அடியொற்றியது. அது, இனவாத அடையாளங்களின் வழியாகத் தோற்றம் பெறவில்லை. தென் இந்தியாவில் பேசப்படும் தமிழ்த் தேசியத்துக்கும் ஈழத்தமிழ் மக்களின் தமிழ்த் தேசியத்துக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஈழத்துத் தமிழ்த் தேசியம் என்பது, எந்தவோர் இனக்குழுவையோ, சமூகத்தையோ தங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை; அடக்கியாளவும் நினைக்கவில்லை. மாறாக, மேலாதிக்கவாதத்தை அச்சுறுத்தலாக உணர்கின்றது. சமத்துவம் தொடர்பான உறுதியான கடப்பாட்டை அது கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியம் என்பது, அடிப்படைவாதச் சிந்தனை சார்ந்தது என்ற எண்ணப்பாடு சில தரப்புகளிடம் உண்டு. ஆனால், தமிழ்த் தேசியம் அடிப்படைவாத எண்ணங்களால் நிலை பெறவில்லை. இது, சமத்துவத்துக்கான, உரிமைக்கான எண்ணப்பாட்டு அரசியலாக நிலை பெற்ற ஒன்று. இதுதான், சாதி, மதம் போன்ற வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கவும் உதவியது.

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய அரசியலில் கட்சிகளிடையே, இயக்கங்களிடையே, போராட்ட வடிவங்கள், போக்கு குறித்தெல்லாம் அக முரண்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இன்றைக்கும் அது தொடர்ந்து வருகின்றன. ஆனால், சாதி, மத, வர்க்க வேறுபாடுகளை முன்னிறுத்திக் கொண்டு, எந்தவொரு தரப்பாலும் தமிழ்த் தேசிய அரசியலைப் பேச முடியாது; நிலைபெறவும் முடியாது. அப்படியான தரப்புகளை, யார் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பில், ஆரம்பக் கட்டத்திலேயே ஆய்ந்து ஆறியும் அறிவும் பக்குவமும், தமிழ் மக்களிடம் உண்டு.

அப்படியானால், ஏன் தமிழ்த் தேசியம், மெல்லச் செத்துக் கொண்டிருப்பதான உரையாடல் வெளி விரிந்திருக்கின்றது, என்ற கேள்வி வருகின்றது. அதற்கான காரணம், ஒரு போராட்ட வடிவத்தின் கீழ், நான்கு தசாப்த காலமாக இருந்த தமிழ் மக்கள், மீண்டும் மீண்டும் அந்தப் போராட்ட வடிவத்தின் மீதும், அது செலுத்திய தாக்கத்தின் மீதும், தங்களை ஒப்பிட்டு நோக்குவதாகும்.

அஹிம்சை வழியிலான போராட்ட வடிவத்திலிருந்து, ஆயுதப் போராட்ட வடிவத்துக்குள் தமிழ்த் தேசிய அரசியல் பயணித்த போது, எழுந்த மாற்றங்கள் ஒரு கட்டம் வரையில் பெரும் நம்பிக்கையாக நிலைபெற்றன. அது, ஆயுதப் போராட்டங்கள் வழியாக நிலப்பரப்புகள் சார்ந்த ஆளுகையாக மாறிய போது, வெற்றி என்கிற விடயம் அடையாளமாகியது. அதுதான், யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப் புலிகள் 90களின் நடுப்பகுதியில் வெளியேறியதும், தாங்கள் வெற்றிகரமானவர்கள் என்கிற விடயத்தை, தமிழ் மக்களிடம் அழுத்தமாகப் பதிய வைப்பதற்கான அவசரமொன்று ஏற்பட்டது. அதுதான், முல்லைத்தீவு மீட்பின் மூலம் நிகழ்த்தவும் பட்டது.

யாழ்ப்பாணத்தை விட்டு வந்தாலும் வன்னிக்குள்ளும் கிழக்கிலும் இருந்து கொண்டு, தங்களை வெற்றிகரமானவர்கள்தான் என்று நிரூபிக்கவும் முடிந்தது.  தாயகம் – புலம்பெயர் தேசம் என்று எங்கும் புலிகளின் போராட்ட வடிவத்தின் பின்னாலான திரட்சியைத் தமிழ் மக்கள் காட்டவும் காரணமானது. இதன் உச்சகட்டமாகவே, 2000களின் தொடக்கத்தில், புலிகளின் “ஓயாத அலை” வெற்றிகள் பதிவு செய்தன. அதுதான், சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழலை, இலங்கையில் மீளத் திறக்கவும் காரணமானது.

ஆனால், அவ்வாறான வெற்றிகளைப் பதிவு செய்த ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலுக்குள் 2009இல் முடிவுக்கு வந்தது. வெற்றிகளின் அடைவுகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் அதுவரை கொண்டு சுமந்த அனைத்தும் காணாமற்போயின் வேண்டுமானால், புலிகளின் வெற்றிகள் வழங்கிய அனுகூலங்களின் மீட்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தோற்றத்தையும் நிலைபெறுகையையும் கொள்ள முடியும்.

ஆயுதப் போராட்ட வடிவம் காட்டிய வெற்றிகளின் அடைவுகளை வைத்துக் கொண்டு, தற்போதைய தமிழ்த் தேசிய அரசியல் நகர்வை ஒருபோதும் ஒப்பு நோக்க முடியாது.

ஏனெனில், ஆயுதப் போராட்டம் அமைதியாக முடிவுக்கு வரவில்லை. முள்ளிவாய்க்கால் என்கிற பேரவலத்தை வழங்கிவிட்டே, முடிவுக்கு வந்தது. அப்படியான நிலையில், அந்தக் கட்டங்களையெல்லாம் கடந்துதான், புதிய போராட்ட வடிவத்தைதத் தமிழ்த் தேசியம் வரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

இத்தகைய சூழலில் அதற்கான காலமும் படிப்பினைகளின் பிரயோகமும், உலக ஒழுங்கைப் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியமாகின்றது. அவ்வாறானதொரு கட்டத்திலேயே, தமிழ்த் தேசியம் இன்று நிற்பதாகவே கொள்ள முடியும். வேண்டுமானால், தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான காலத்தை, அதிகமாக எடுத்துக் கொண்டிருப்பதாகக் கொள்ள முடியும். மாறாக, சாவுப் பாதையில் தமிழ்த் தேசியம் செல்வதாகக் கொள்ள முடியாது.

-புருஜோத்தமன் தங்கமயில்