சீனாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 தொற்றுநோய்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றி இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் கால் பதித்து விட்டது. இந்த நிலையில், அந்த நாட்டில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 தொற்றுநோய்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளது.
இதுபற்றி அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “சார்ஸ், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், கொரோனா வைரஸ் இப்படி 20 ஆண்டுகளில் 5 தொற்றுநோய்கள் சீனாவில் இருந்து வந்துவிட்டன. எத்தனை காலம்தான் உலகம் இத்தகைய பயங்கரமான நிலையில் வைக்கப்பட்டிருக்க முடியும்? இது ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தாக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், “உலகமெங்கும் உள்ள மக்கள் எழுந்து சீன அரசாங்கத்திடம், இனி சீனாவில் இருந்து ஒரு தொற்று நோய் வெளியே வரக்கூடாது என்று சொல்லப்போகிறார்கள். அது பரிசோதனைக்கூடத்தில் இருந்தும் சரி, கடல்வாழ் உயிரினங்கள் சந்தையில் இருந்தும் சரி” என்று கூறினார்.