கொரோனா பாதிப்பில் 2-ம் இடத்துக்கு முன்னேற்றம்: தாங்குமா தமிழகம்?- கமல்ஹாசன்

302 0

 முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என்று கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2549 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 25922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 975 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 9267 பேருக்கும், தமிழகத்தில் 9227 பேருக்கும், டெல்லியில் 7998 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 4173 பேருக்கும், ராஜஸ்தானில் 4328 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3729 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8-ம் இடத்திலிருந்து 2-ம் இடத்தை எட்டிப்பிடித்து விட்டது.

காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறது அரசு. தாங்குமா தமிழகம்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.