ஊரடங்கு போட்டு 7 வாரங்களுக்கு பின்னர் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைக்கு செல்ல தொடங்கினர்.ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
அங்கு நேற்று மதிய நிலவரப்படி 2 லட்சத்து 29 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று உள்ளது, 33 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் கூறியது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அங்கு 7 வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். அப்போது அவர் இந்த வாரம் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர ஏற்ற தருணம் அல்ல என்றபோதும், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவித்தார்.
வீட்டில் இருந்து பணியாற்ற முடியாதவர்கள் 13-ந் தேதி (நேற்று) முதல் பணிக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டது. இது கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைக்கும் பொருந்தும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். பணிக்கு செல்வோர் நடந்தோ, தங்கள் வாகனங்களிலோ, சைக்கிள்களிலோ செல்லலாம் எனவும் குறிப்பிட்டார். பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பள்ளிகளை பொறுத்தமட்டில் 11 வயதுக்குட்பட்டோர் (ஆரம்ப பள்ளி மாணவர்கள்) ஜூன் 1-ந் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
கடைகளும் ஜூன் 1 முதல் திறக்கப்படும், ஓட்டல்கள், உணவுவிடுதிகள் ஜூலை 1 முதல் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய ஊரடங்கு விதிகள் நேற்று அமலுக்கு வந்தன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே நடைபயிற்சி சென்றனர். சிலர் உடற்பயிற்சிக்கு போனார்கள். ஒரு சிலர் பூங்காக்களுக்கு சென்று தங்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.
அதன்படி வீட்டில் இருந்து பணிக்கு செய்ய முடியாத லட்சக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியே வந்து பணிக்கு செல்ல தொடங்கினர். அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.
உணவு உற்பத்தி, கட்டுமானம், உற்பத்தி துறைகள் செயல்பட தொடங்கி உள்ளன. பணியிடங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன.
வீடு மாற்ற விரும்புகிறவர்களுக்கு அதற்கான அனுமதி தரப்பட்டுள்ளது.
இதற்கிடையே கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதை நியாயப்படுத்திய போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷாப்ஸ், “பொதுமக்கள் வெள்ளம்போல பொது போக்குவரத்தை பயன்படுத்த வராக்கூடாது. இது வாழ்வா, சாவா என்பதுபோன்ற தருணம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் சுரங்க ரெயில் சேவையை ஏராளமானோர் பயன்படுத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் தனி மனித இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பணியிடங்களில் தூய்மை பராமரிக்கப்படுகின்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு சற்றே நிம்மதியை தந்துள்ளது.