தென்னை மரத்தில் கசிப்பை மறைத்து வைத்தவர் கைது!

285 0

யாழ்ப்பாணம் – உரும்பிராய் கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனைக்காக மிகவும் நூதனமான முறையில் தென்னை மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஒருவர் நேற்று (10) மாலை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராய் கிழக்கு பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப் பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

சந்தேகத்திற்குரிய வீட்டினை பொலிஸார் சோதனையிட்ட போது குறித்த வீட்டின் வளவினுள் பல குழிகள் கானப்பட்டுள்ளன. பொலிஸார் குழிகளை தோன்டிய போதிலும் அதில் எவையும் கிடைக்கவில்லை.

எனினும் தொடர் தேடுதலின் போது தென்னை மரத்தில் நூதனமான முறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கசிப்பு,கோடா மற்றும் உபகரணங்கள் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 6 போத்தல் கசிப்பு 18 போத்தல் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை அயல் வீட்டில் இருந்து 2 போத்தல் கசிப்பினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிறிதொருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரிடமிருந்து கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

மற்றைய நபரிடம் இருந்து 2 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.