ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து இடம்பெறும் விஷேட விசாரணைகளில் ஒரு அங்கமாக, திருகோணமலை – தோப்பூர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து மூதூர் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும், பயங்கரவாதி சஹ்ரானின் பிரதான சகாவான மொஹமட் இப்ராஹீம் சாஹித் அஹமட்டிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைய கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி சம்பூர் பொலிஸ் பிரிவில் ஆயுத பயிற்சி முகாம் ஒன்று ஒரு வருடத்தின் பின்னர் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அது குறித்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், இன்று ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதாக நம்பப்படும் மற்றொரு இடம் தோப்பூர் பகுதியில் கண்டறியப்பட்ட நிலையிலேயே, அந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் மூதூர் பிரதேச சபை தவிசாளரான 55 வயதுடைய ஹாஜா மொஹிதீனை கைது செய்ததாக நான்காம் மாடித் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர், கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி.யின் தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
சி.ஐ.டி. விசாரணைகளின் பிரகாரம் தோப்பூர் பகுதி ஆயுத பயிற்சி முகாமில், துப்பாக்கிகளை கழற்றி பூட்டுதல், சுத்திகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் செயன்முறை பயிற்சி ஊடாக போதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைதான 5 சந்தேக நபர்களுக்கு அங்கு ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
மவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு விசாரணைகளில் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.